ஒரு சமயம் திருப்பாற்கடலில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்கும், தம்முள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவி வைகுண்டத்தைவிட்டு இந்த ஸ்தலத்திற்கு வந்து நாராயணனை நோக்கி கடும்தவம் புரிந்தாள். அவளது தவத்திற்கு மெச்சிய பெருமாள் காட்சியளித்து 'நீயே, பெரியவள்' என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் வந்து தங்கி தவமியற்றியதால் இந்த ஸ்தலம் 'திருத்தங்கல்' என்னும் பெயர் ஏற்பட்டது.
மூலவர் நின்ற நாராயணன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். மூலவரின் வலதுபுறம் ஸ்ரீதேவி அன்னநாயகி என்ற திருநாமத்துடன், நீளாதேவி அனந்த நாயகி என்ற திருநாமத்துடன், இடதுபுறம் பூதேவி அம்ருத நாயகி என்ற திருநாமத்துடன், ஜாம்பவதி ஆகியோர் உள்ளனர். உத்ஸவர் திருநாமம் திருத்தண்காலப்பன். தாயார் செங்கமல தாயார் என்று வணங்கப்படுகின்றார். ஸ்ரீதேவி, ஸ்ரீவல்லவன், சல்யபாண்டியன், புலி ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
கோயில் சிறுகுன்றின் மீது உள்ளது. எல்லாத் திருமேனிகளும் சுதையால் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளதால் திருமஞ்சனம் நடைபெறுவதில்லை. செங்கமலவல்லித் தாயாருக்கு மட்டும் தினந்தோறும் எண்ணைக் காப்பு திருமஞ்சனம் உண்டு. இந்த ஸ்தலத்து தாயாரைப் பிரார்த்தித்துக் கொண்டு 9 கெஜப் புடவை சாத்தினால் பெண்களுக்கு விவாஹப்ராப்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.
கருடாழ்வார் ஸர்ப்பத்துடனும், அமிர்த கலசத்துடனும் உள்ளார். கிருஷ்ணனின் பௌத்திரன் அநிருத்தன் உஷையை திருமணம் செய்த ஸ்தலம். சந்திரகேது என்ற அரசன் ஏகாதசி விரதம் இருந்தபோது, துவாதசி பாரணைக்குமுன் எண்ணெய் ஸ்நானம் செய்தபடியால் புலியாகப் பிறந்தான். பூர்வஜன்ம ஞாபகத்தால் இந்த ஸ்தலத்திற்கு வந்து பெருமாளை பூஜை செய்து மோட்சம் அடைந்தார்.
திருமங்கையாழ்வார் 4 பாசுரங்களும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரமும் ஆக 5 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|